கோலாலம்பூர், டிசம்பர்-13, உயிர் சேதங்களை ஏற்படுத்தும் அனைத்து விதமான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கொள்கையளவில் மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.
அவ்விஷயத்தில், இனம், மதம், நிறம், நாடு என்ற வேறுபாடு இல்லையென, வெளியுறவு துணையமைச்சர் டத்தோ மொஹமட் அலாமின் (Datuk Mohamad Alamin) கூறினார்.
வங்காளதேச விவகாரமும் அதில் விதிவிலக்கு அல்ல; அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடப்பதாக எழுந்துள்ள புகார்களை அரசாங்கம் நன்கறியும்.
அவர்களுக்கு அங்கு இழைக்கப்படுவதாகக் கூறப்படும் அனைத்து வகையிலான பாகுபாடு குறித்தும் மேலேசியா கவலைக் கொள்வதாக, மேலவையில் பேசிய போது துணையமைச்சர் சொன்னார்.
மனித உரிமையையும் சிறுபான்மையினரின் நலனையும் கட்டிக் காப்பதில் மலேசியா தனது கடப்பாட்டை தொடர்ந்து உறுதிச் செய்து வருகிறது.
பாலஸ்தீன விவகாரம், தென்னாப்பிரிக்காவில் அமுலில் இருந்த நிறவெறிக் கொள்கைப் போன்றவற்றில் மலேசியா உரத்தக் குரல் எழுப்பியதே அதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டினார்.
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் இனவெறித் தாக்குதல்களை, மலேசியா கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென, செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் முன்னதாக மேலவையில் கேட்டுக் கொண்டிருந்தார்.
எந்தவொரு பாகுபாடுமின்றி, அங்குள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக வலுவாக குரலெழுப்ப வேண்டியது நமது கடமையென Dr லிங்கேஷ் வலியுறுத்திய நிலையில், துணையமைச்சர் அதற்குப் பதிலளித்துள்ளார்.
வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதர் பதவியைத் துறந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டே ஓடியதிலிருந்து, சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், சேதப்படுத்துதல், தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.