
கோலாலம்பூர், அக்டோபர் 15 – வங்கிக் கணக்கில் தவறுதலாக 1 பில்லியன் ரிங்கிட் வரவில் இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அக்டோபர் 14ஆம் தேதி, தனது வங்கிக் கணக்கில் இந்தப் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டதாக சமூக ஊடகமான Threads-இல் சம்பந்தப்பட்ட ஆடவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பணம், மலேசிய தினம் தொடர்பான வெகுமதித் திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எந்தவொரு விளம்பரத் திட்டத்திலும் பங்கேற்காததால், சந்தேகமடைந்த அவர் வங்கியைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர், அது தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணம் என்பதை வங்கி உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து, அந்தத் தொகை தனது கணக்கிலிருந்து நீக்கப்பட்டதாக ஃபைரூஸ் தெரிவித்தார். தவறைச் சுட்டிக்காட்டியதற்காக வங்கி தனக்கு வெகுமதி வழங்க முன்வந்ததாகவும், அதன் விவரங்கள் குறித்த மின்னஞ்சலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.



