Latestமலேசியா

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்து

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்த

புத்ராஜெயா, பிப்ரவரி-7,

நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களின் நிர்வாகம் மற்றும் கட்டுமானம் தொடர்பான விவகாரங்கள், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன, மேற்கொள்ளப்பட வேண்டும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களின் கட்டுமானம், இடமாற்றம் மற்றும் அனுமதி தொடர்பான அதிகாரம் KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

3 முக்கிய சட்டங்கள் அதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன…

அதாவது 1976-ஆம் ஆண்டு ஊராட்சி சட்டம், (Akta 171), உள்ளூர் அதிகாரிகளுக்கு கட்டட அமைப்பு மற்றும் சுத்தம் தொடர்பான அதிகாரத்தை வழங்குகிறது.

1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டம் (Akta 133), கட்டுமானத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்கிறது.

1976-ஆம் ஆண்டு நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் (Akta 172), வழிபாட்டு இடங்களுக்கு குறிப்பிட்ட நிலப்பகுதி மற்றும் மண்டல திட்டமிடலை நிர்ணயிக்கிறது.

எனவே வழிபாட்டு இடங்களைச் சுற்றிய பிரச்னைகள் இன, மத உணர்வுகளை தூண்டாமல், சட்டத்தின் அடிப்படையில், உண்மைகள் மற்றும் கலந்துரையாடலின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சு சுட்டிக் காட்டியது.

மதங்களுக்கு இடையிலான புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் மத்தியஸ்தராக செயல்படும் தனது கடப்பாட்டையும் ஒருமைப்பாட்டு அமைச்சு மறு உறுதிப்படுத்தியது.

அனைத்து தரப்பினரும் சட்டத்தை மதித்து, யூகங்களைத் தவிர்த்து, பரஸ்பர மரியாதையை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அது அழைப்பு விடுத்துள்ளது.

‘Kuil haram’ என வழிபாட்டுத் தலங்களை முத்திரைக் குத்தி அவற்றுக்கு எதிராக பேரணி நடத்த சாம்ரி வினோத் தலைமையில் 141 அரசு சார்பற்ற அமைப்புகள் புறப்பட்டுள்ள நிலையில், அமைச்சு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!