
கோலாலம்பூர், மார்ச்-10-மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தேசிய சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, DAP தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை இடிக்க அல்லது தாக்க மிரட்டியதாக கூறப்படும் நபர்களுக்கு எதிராக ஏன் வழக்கு பதிவுச் செய்யப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய மிரட்டல்கள் மலேசியா போன்ற பல்லின – மத நம்பிக்கைகள் கொண்ட நாட்டில் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கோபிந்த் எச்சரித்தார்.
எனவே, இந்த அண்மைய விவகாரங்களில் விசாரணைகள் முடிந்துள்ளனவா?…ஒருவேளை சட்டம் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டோர் ஏன் இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை?… என்பனவற்றை சட்டத்துறை தலைவர் விளக்க வேண்டும் என்றார் அவர்.
இத்தகைய விஷயங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறையக்கூடும் என்றும் கோபிந்த் நினைவுறுத்தினார்.



