
பெய்ஜிங், ஏப்ரல்-25- அமெரிக்கா – சீனா இடையிலான வாணிபப் போரை முடிவுக்குக் கொண்டு வர உண்மையிலேயே விரும்பினால், சீனப் பொருட்களுக்கு விதித்த கூடுதல் வரி விகிதத்தை டோனல்ட் டிரம்ப் இரத்துச் செய்ய வேண்டும்.
அது தான் அந்த அமெரிக்க அதிபருக்கு அழகு என, பெய்ஜிங் இடித்துரைத்துள்ளது.
“பிரச்னையைத் தொடங்கியது நாங்கள் அல்ல; மணியைக் கட்டிவர் தான் அதன் முடிச்சை அவிழ்க்க வேண்டும்” என சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.
வாணிப ஒப்பந்தத்தை இறுதிச் செய்யும் பேச்சுவார்த்தையில் சீனாவுடன் தாம் ‘நல்ல’ முறையில் நடந்துகொள்ளப் போவதாக செவ்வாய்க்கிழமை டிரம்ப் கூறியிருந்தது குறித்து பெய்ஜிங் இவ்வாறு கருத்துரைத்தது.
இவ்வேளையில் தற்போதைக்கு அமெரிக்காவுடன் சீனா எந்த வாணிபப் பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை.
அதே சமயம் ‘பரஸ்பர’ வரி தொடர்பிலும் பேச்சுவார்த்தை இல்லையென பெய்ஜிங் கூறியது.
இரு நாடுகளும் வரிப் போர் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதாக முன்னதாக டிரம்ப் கூறியிருந்தார்.
அதுவும், சீனா தான் இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக அவர் குறிப்பிட்ட நிலையில், சீனா அதனை மறுத்துள்ளது.