
கோலாலாம்பூர், ஜூலை-17- முன்னாள் அரசியல் செயலாளர் தியோ பெங் ஹோக்கின்( Teoh Beng Hock)) குடும்பத்தினரிடம் ‘மரியாதை மற்றும் துக்கத்தின் அடையாளமாக’ DAP தலைவர்கள் இன்று தலைவணங்கினர்.
அதே நேரத்தில் பெங் ஹோக்கின் மரணம் குறித்த விசாரணையில் தாங்களும் ஏமாற்றமடைந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக், உதவித் தலைவர் தியோ நீ சிங், சிலாங்கூர் DAP தலைவர் Ng Sze Han மற்றும் பெங் ஹோக்கின் முன்னாள் முதலாளி Ean Yong Hian Wah ஆகியோர், கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் முடிவில் சுமார் 30 வினாடிகள் தலைவணங்கினர்.
என்ற போதிலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC வாயிலாக அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள ‘கருணைத் தொகையை’ ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு பெங் ஹோக்கின் குடும்பத்திடம் அந்தோணி லோக் வேண்டுகோள் விடுத்தார்.
அதில் அரசாங்கம் எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்கவில்லை; எனவே பெங் ஹோக்கின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட எந்தத் தடையுமில்லை என்றார் அவர்.
MACC வழங்க முன்வந்துள்ள இழப்பீட்டை நிராகரிப்பதாக நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த அவரின் தங்கை தியோ லீ லான் (Teoh Lee Lan), அண்ணனின் மரணத்திற்கு தொடர்ந்து நீதி கேட்போம் என திட்டவட்டமாகக் கூறினார்.
பெங் ஹோக் உயிரிழந்த 16-ஆம் ஆண்டு நினைவு நாளில், MACC நேற்று அவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பும் கேட்டது.
இருப்பினும், தங்களுக்கு தேவை MACC-யின் மன்னிப்பு அல்ல, மாறாக மர்மமான மரணத்திற்கு நீதியே என தியோ லீ லான் கூறியிருந்தார்.