
கோத்தா பாரு, நவம்பர்-3,
தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது Mohd Fuad Fahmie Ghazali என்பரே கொல்லப்பட்டவர் ஆவார்.
சனிக்கிழமை மாலை கணவரும் தானும் வீட்டில் CCTV கேமராவைப் பொருத்திக் கொண்டிருந்த போது, திடீரென வந்த 2 ஆடவர்கள் பின்னாலிருந்து சரமாரியாகச் சுட்டதாக, 35 வயது மனைவி Wan Fatihah Mat Husin கூறினார்.
மிக அருகிலிருந்தே கணவர் சுடப்பட்டதாகவும், இரத்த வெள்ளத்தில் அவர் தன் மடியில் சரிந்து விழுந்தபிறகும் கூட, கொஞ்சமும் இரக்கமும் இல்லாமல் தொடர்ந்து சரமாரியாக சுடப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
நெஞ்சு, கழுத்து, உடம்பு என 18 இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்து சுங்கை கோலோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர், அன்றிரவு 9 மணிக்கு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மலேசிய – தாய்லாந்து போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கானக் காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், இது உயர் முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்கு என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே ஆகக்கடைசி தகலின் படி, கொலையாளிகளின் ஒருவன் கிளந்தான் கால்பந்து அணியின் முன்னாள் இறக்குமதி ஆட்டக்காரர் என மாநில போலீஸ் கூறியது.
இரட்டைக் குடியுரிமை வைத்துள்ள அந்நபர் குறித்து மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.



