
ஷா ஆலாம், ஆகஸ்ட்-12-அனைத்துலக விமான நிலையங்கள் அருகில் கஞ்சாவைச் சேமித்து வைத்து, ஆட்களின் மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற அனைத்துலக போதைப்பொருள் கும்பலின் சதியை போலீஸ் முறியடித்துள்ளது.
அவற்றின் மதிப்பு 21 மில்லியன் ரிங்கிட் என, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்தார்.
ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையில் போர்ச்சுகல், சிங்கப்பூர் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் உட்பட 9 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
பினாங்கு அனைத்துலக விமான நிலையம் மற்றும் செப்பாங் KLIA அருகில் உள்ள வீடுகளை போதைப்பொருட்களை தற்காலிகமாக சேமித்து வைக்கும் இடங்களாக இந்த கும்பல் பயன்படுத்தியுள்ளது.
பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் பயணப் பைகளில் இருந்து 270 கிலோ கிராமுக்கு அதிகமான உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அண்டை நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருட்கள், ஆட்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஹுசேய்ன் தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்ட 9 பேரும் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



