
ஈப்போ, அக்டோபர்-20, பசிஃபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியின் (Papua New Guinea), நியூ வெஸ்ட் பிரிட்டன் மாநில ஆளுநர் மேதகு சசிந்திரன் முத்துவேல், வரும் அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் பேராக், ஈப்போ மாநகருக்கு வருகைப் புரியவுள்ளார்.
பேராக் மாநில அமால் மக்மூர் சமுகநல இயக்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியா வரும் சசிந்திரன், ஈப்போவில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவரான 49 வயது சசிந்திரனின் இந்த முதல் பயணம், பப்புவா நியூ கினிக்கும் பேராக் மாநிலத்துக்கும் இடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்குமென,
பேராக் அமால் மக்மூர் சமுகநல இயக்கத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான கே. நாச்சிமுத்து கூறினார்.
அதோடு, வணிகம், கலாச்சாரம், கல்வி, சுற்றுலாத் துறைகளில் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அக்டோபர் 26-ஆம் தேதி மாலையில், ஈப்போ, கிளேபாங் ஏயோன் பேராங்காடியில் பேராக் மாநில அமால் மக்மூர் சமுகநல இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 2024ஆம் ஆண்டின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் சசிந்திரன் கலந்து கொள்வார்.
அவரின் இரண்டு நாள் பயணத்தில் முதன்மை நிகழ்ச்சியாக இந்தத் தீபாவளி கொண்டாட்டம் அமையவுள்ளது.
இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறுவதோடு ஏழ்மையான குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் அன்பளிப்பாக வழங்கப்படும்.
அன்றிரவு சசிந்திரன் ஈப்போ லிட்டில் இந்தியா பகுதிக்கு வருகை தந்து, வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள சில கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பார்.
ஞாயிற்றுக்கிழமை, புந்தோங்கில் உள்ள இந்திய தின்பண்டங்கள் உற்பத்தி செய்யும் பகுதியான “கம்போங் கச்சாங் புத்தேக்கு வருகைத் தருகிறார்.
தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாசாரம் தொடர்பான விஷயங்கள் குறித்த கலந்துரையாடலில் அவர் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.