
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை: ஜூன் 1 முதல் அமல்
கோலாலம்பூர், பிப்ரவரி 10
வெளிநாட்டில் பிறக்கும் மலேசிய குடியுரிமைப் பெற்றவர்களின் குழந்தைகளுக்குத் தானாகக் குடியுரிமை வழங்கும் நடைமுறை, வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு, மலேசிய குடிமகளான பெண் ஒருவர் வெளிநாட்டு குடிமகனை திருமணம் செய்திருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை வழங்கும் விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution கூறியுள்ளார்.
இதனுடன், முன்பதிவுக்கான இணையவழி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் மாமன்னரின் அனுமதி பெறப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கூட்டரசு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் விளக்கினார்.
வெளிநாட்டில் குழந்தை பெற்ற மலேசிய தாய்மார்கள், அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறை விதிமுறைகளைப் (SOP) பின்பற்றினால், அவர்களின் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



