
கோலாலம்பூர், மே-5- அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பை எதிர்கொள்வதில், பயனர்களுக்கு சுமையாய் போய் முடியும் எந்தவொரு நிதிக் கொள்கை மாற்றத்தையும் அரசாங்கம் நிறுத்தி வைக்க வேண்டும்.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.இவ்வாண்டு மத்தியில் RON 95 பெட்ரோலுக்கான மானியங்களை அகற்றுவதும் அவற்றிலடங்குமென்றார் அவர்.
அதோடு, மின்சாரக் கட்டண உயர்வையும் அரசாங்கம் தாமதப்படுத்த வேண்டும்; முடிந்தால், 30 போயிங் விமானங்களைக் கொள்முதல் செய்வதையும் மடானி அரசு ஒத்தி வைக்க வேண்டுமென, லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி தொடர்பில் இன்று மக்களவையில் நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போது ஹம்சா விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.
நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலில் இவற்றையெல்லாம் ஒத்தி வைப்பதே சிறந்தது என்றார் அவர்.
இவ்வேளையில், இந்த பரஸ்பர வரி குதித்து மேற்கொண்டு விவாதிக்க அரசாங்க மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.
இதன் மூலம் எதிர்கட்சியினரும் தங்களது கருத்துகளை வழங்க முடிவதோடு, எந்தவொரு முடிவும் வெளிப்படையாக இருப்பதை உறுதிச் செய்ய முடியுமென்றார் அவர்.
இன்றைய சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக தீர்மானம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அமெரிக்காவுடன் மலேசியா தொடர்ந்து பேச்சு நடத்துமென, அவர் மறுஉறுதிப்படுத்தியிருந்தார்.