வெளிநாட்டு தலையீட்டை மலேசியா எதிர்க்கிறது; அமைதியான கலந்துரையாடலே முக்கியம்; விஸ்மா புத்ரா அறிக்கை

புத்ராஜெயா, ஜனவரி-4,
பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை மலேசியா கடுமையாக எதிர்ப்பதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியுள்ளது.
அனைத்து பிரச்னைகளும் கலந்துரையாடல் மற்றும் அனைத்துலகச் சட்டத்திற்குட்பட்டு அமைதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது.
தென்னமரிக்க நாடான வெனிசுவலாவுக்குள் இராணுவத்தை அனுப்பி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்த சம்பவம் குறித்து விஸ்மா புத்ரா அவ்வாறு கருத்துரைத்தது.
இந்த எதிர்பாரா சம்பவத்தை அடுத்து வெனிசுவலா நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தலைநகர் கராகஸில் உள்ள மலேசிய தூதரகம், அங்குள்ள மலேசியர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்து வருகிறது.
இதற்கிடையில் மடுரோவை கைதுச் செய்த அமெரிக்கப் படைகள் அவரையும் மனைவியையும் நியூ யோர்க்கிற்கு அழைத்துச் சென்றுள்ளன.
அங்கு அவர் மீது போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
தலைவரில்லா நாட்டை தற்காலிகமாக அமெரிக்காவே வழிநடத்தும் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதே சமயம், இடைக்கால அதிபராக, நடப்பு பெண் துணை அதிபர் Delcy Rodriquez-சை வெனிசுவலா நாடாளுமன்றம் நியமித்துள்ளது.



