
கோலாலம்பூர், செப் -26,
ஜாலான் ஈப்போவிலுள்ள முத்தியாரா வளாகத்தை சுற்றியுள்ள மூன்று அழகு நிலைய மையங்களை மூடுவதற்கு DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அழகு நிலைய மையங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததோடு , மேலும் அவை வெளிநாட்டினரால் நடத்தப்பட்டன. கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச குடிநுழைவுத்துறை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து கோலாலம்பூர் மாநகர் மன்றம் அண்மையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உரிமம் பெறாத வணிக வளாகங்களையும், வளாகத்தின் உரிம நிபந்தனைகளை துஷ்பிரயோகம் செய்தவர்களையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 நபர்களையும் குடிநுழைவுத்துறை கைது செய்ததாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இதுதவிர 17 குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக தடுப்பு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.