
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-2 – பினாங்கு தங்க இரத ஊர்வலம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பதை பக்தர்கள் நிகழ் நேரத்தில் தெரிந்துகொள்ள ஏதுவாக, மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் ‘Chariot Tracker’ எனும் தடம் காணல் முறை அறிமுகம் கண்டுள்ளது.
Digital Penang ஒத்துழைப்புடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த கண்காணிப்பு முறையை, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr.லிங்கேஷ்வரன் தலைமையில் அது அறிமுகம் கண்டது.
பக்தர்கள் தங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி தங்க இரதத்தை வசதியாகக் கண்காணிக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் அதிக துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகின்றன.
இது, தேர் செல்லும் வழியில் பக்தர்கள் தங்கள் ஆன்மீக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை எளிதாக்குகிறது.
குறிப்பாக அர்ச்சனை, வழிபாடு, காணிக்கை செலுத்துவது போன்றவற்றை பக்தர்கள் நன்கு திட்டமிட்டுக் கொள்ள முடியும்.
தைப்பூசக் கொண்டாட்டங்களில் எந்தவொரு முக்கியத் தருணங்களையும் அவர்கள் தவற விடாதிருப்பதை இதன் மூலம் உறுதிச் செய்ய முடியும்.
தைப்பூசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், இந்த கண்காணிப்பு முறை அனைவருக்கும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிறைவான அனுபவத்தை உருவாக்க உதவுமென ராயர் நம்பிக்கைத் தெரிவித்தார்.