
செத்தியூ, டிசம்பர்-2 – நாட்டில் 10 மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரைத் நெருங்கியிருந்தாலும், பேரிடர் அவசர காலத்தை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமர் கூறியுள்ளார்.
அவசர காலத்தை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை இன்னமும் கைமீறிப் போய்விடவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
போலீஸ், இராணுவம், பொதுத் தற்காப்புப் படை என அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் களத்தில் இறங்கி முழு வீச்சில் பணியாற்றி வருவதால், நிலைமையைச் சமாளிக்க முடிவதாக அவர் சொன்னார்.
திரங்கானுவில் வெள்ளமேற்பட்ட பகுதிகளுக்கு நேரில் வருகைப் புரிந்து மக்களுக்கு ஆறுதல் கூறியப் பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் பேசினார்.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சாம்சூரி மொக்தாரும் (Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar) உடனிருந்தார்.
இவ்வேளையில் சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் மையத்தின் தகவலின் படி, இன்று காலை 7.30 மணி வரை 10 மாநிலங்களில் 136, 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளந்தான், திரங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ், பேராக், மலாக்கா, பஹாங், ஜோகூர், சிலாங்கூர் ஆகியவையே அந்த 10 மாநிலங்களாகும்.
கிளந்தானில் மட்டுமே 85,762 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
திரங்கானுவில் 38,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக தலா 50 மில்லியன் ரிங்கிட்டை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.