
ரெம்பாவ், ஏப்ரல்-7- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், மற்றொரு வாகனம் வேண்டுமென்றே நெருக்கத்தில் பின்தொடர்ந்து, பின்னர் திடீரென முந்திச் சென்றதால் ஏற்பட்ட ஒரு விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு 10.35 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோ மற்றும் நெகிரி செம்பிலான், செனாவாங் இடையேயான பாதையில் அவ்விபத்து நிகழ்ந்தது. விபத்தின் போது dash cam கேமராவில் பதிவான காட்சிகள் வைரலாகியுள்ளதையும் ரெம்பாவ் போலீஸ் இடைக்காலத் தலைவர் அஸ்மி அகி சுட்டிக் காட்டினார்.
வலப்பக்கமாகச் சென்றுகொண்டிருந்த Renault Kangoo வாகனத்தை, கருப்பு நிற MPV வாகனம் மிக மிக நெருக்கத்தில் பின்தொடருவது வைரல் வீடியோவில் தெரிகிறது. இதனால் அந்த Renault வாகனம், நடுப்பாதைக்குள் நுழைந்தது.
அப்போது அந்த MPV வாகனமும் நடுப்பாதைக்குள் நுழைந்து ஒரு கட்டத்தில் Renault வாகனத்தை முந்திச் சென்றது. இதனால் Renault தடம்புரண்டு சாலையின் இடப்பக்கமாகக் கவிழ்ந்தது.
அதில் அவ்வாகனத்தின் பின்னிருக்கைப் பயணியான 22 வயது இளைஞர் காயமுற்றார். காரோட்டியான 20 வயது பெண்ணும் 18 வயது மற்றொரு பயணியும் காயமின்றி உயிர் தப்பினர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு வந்துதவுமாறு அஸ்மி கேட்டுக் கொண்டார்.