
பெங்களூரு, அக்டோபர்-23 – WhatsApp பயனர்கள், இனி எந்தவொரு கருவியிலிருந்தும் தொடர்பு எண்களை சேர்க்கவோ அழிக்கவோ முடியும்.
இதுநாள் வரையில், கைப்பேசி அடிப்படையிலான தொடர்பு எண்கள் மேலாண்மை முறையைப் பயன்படுத்தி வந்த WhatsApp, விரைவில் அப்புதிய முறைக்கு மாறுகிறது.
வரும் வாரங்களில் கட்டம் கட்டமாகப் புதுப்பிக்கப்படும் அப்புதிய முறை, முதலில் WhatsApp Web மற்றும் இதர Windows தளங்களில் இடம் பெறும்.
பிறகு, இணைக்கப்பட்ட மற்ற கருவிகளுக்கு அது விரிவுப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தொடர்பு எண்களை பிரத்தியேகமாக WhatsApp-பிலேயே சேமித்து வைக்கும் புதிய வசதியும் அறிமுகமாகிறது.
அவ்வாறு WhatsApp-பிலேயே தொடர்பு எண்களை சேமித்து வைப்பதன் மூலம், கைப்பேசிகளை மாற்றும் போதோ அல்லது அவை காணாமல் போனாலோ, தொடர்பு எண்கள் இயல்பாகவே திரும்பக் கிடைத்து விடும்.
இவ்வேளையில், பயனர்களின் பாதுகாப்புக் கருதி, கைப்பேசி எண்களுக்குப் பதிலாக இனி Username பயன்பாட்டை கொண்டு வரவும் WhatsApp உத்தேசித்துள்ளது.
அது அமுலுக்கு வந்தால் கைப்பேசி எண்களைப் பகிர்ந்துகொள்ளாமலேயே மற்றவர்களுடன் தொடர்புகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.