
ஷா ஆலாம், செப்டம்பர்-18,
ஷா ஆலாமில் ஓர் உணவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் புகைபிடித்ததால் ஏற்பட்ட சண்டையில் 49 வயது மெக்கானிக் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 12-ஆம் தேதி செக்ஷன் 13-ல் நடந்த அச்சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகு புகார் செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.
அந்தக் கர்ப்பிணிப் பெண், கருவில் உள்ள தன் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட்டு புகைபிடிப்பதை நிறுத்தச் சொல்லியபோதும், சந்தேக நபர் மறுத்து விட்டார்.
முதலில் உணவக ஊழியர் மூலமாகவும் பின்னர் அப்பெண்ணின் கணவரே பலமுறை கேட்டுக் கொண்டபோதும், அந்நபர் புகைப்பதை நிறுத்தவில்லை.
ஒரு கட்டத்தில் அத்தம்பதியை நோக்கி புகையை அவ்வாடவர் ஊதித் தள்ளினார்.
இதனால் பொறுமையிழந்த பெண்ணின் கணவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே தள்ளுமுள்ளும் சண்டையும் ஏற்பட்டது.
பின்னர் அவ்வாடவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில், தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய கையோடு செக்ஷன் 9-ல் அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவர் தடுத்து வைக்கப்படுவார் என ஷா ஆலாம் போலீஸ் கூறியது.