
புத்ராஜெயா, மார்ச்-13-நோன்புப் பெருநாள் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் நாட்டில் போதுமான அளவில் இருப்பதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு உறுதிப்படுத்தியுள்ளார்.
அரிசி கையிருப்பு குறைந்தது 9 மாத தேவையை நிறைவேற்றும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோழி, முட்டை, மீன், மாட்டிறைச்சி, எருமை இறைச்சி, பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் நிலையான அளவில் உள்ளதாக, சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
எனவே, மக்கள் கவலையில்லாமல் பண்டிகையை கொண்டாடலாம்; தேவையற்ற பீதியால் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உணவுகள் போதுமானவையாக இருந்தாலும், சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன் கையிருப்பை அதிகரிக்கும் முயற்சிகளை அமைச்சு தீவிரப்படுத்தும் என்றார் அவர்.
நாட்டின் உணவு இறக்குமதிகளும் பெரும்பாலும், தற்போது போர் சூழலில் சிக்கியுள்ள மேற்காசிய நாடுகளை கடந்துவரவில்லை; மாறாக, இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், அர்ஜேண்டினா, நியூ சிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தே வருகின்றன.
ஒருவேளை மேற்காசியாவில் போர் நீடித்தால் கூட, சரக்குப் போக்குவரத்து மீது மட்டுமே அது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென மாட் சாபு கூறினார்.



