
ஹோங் கோங், செப்டம்பர்-24 – இவ்வாண்டின் உலகின் மிக வலுவான புயலாகக் கருதப்படும் ‘ரகாசா’ சூறாவளி இன்று அதிகாலை ஹோங் கோங் நகரை தாக்கியது.
மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசியதாலும், கனமழை பெய்ததாலும், உச்சக்கட்ட எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டது.
ஹோங் கோங் முழுவதும் 49 தற்காலிக தங்கும் முகாம்கள் திறக்கப்பட்டு, 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
எச்சரிக்கையை மீறி கடற்கரையில் புயலை ‘அதிசயித்து’ பார்த்த தாய் மற்றும் அவரது 5 வயது மகன் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டனர்; இருவரும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கைகள் விடப்பட்டிருந்ததால் தெருக்கள் வெறிச்சோடியிருந்தன.
கடற்கரைகளில் அலைகள் பெருமளவில் மோதியதை வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.
அதே சமயம் அச்சம் காரணமாக சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களும் பெருமளவில் விற்று தீர்ந்தன.
இவ்வேளையில் பக்கத்து நாடான தைவானில், ஏரி தடுப்பு உடைந்து, நீர் ஊரைச் சூழ்ந்ததால் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
இச்சூறாவளி திங்கட்கிழமை பிலிப்பின்ஸ் வட பகுதியையும் தாக்கியிருந்தது.
அருகிலுள்ள மக்காவிலும் மிக உச்சக்கட்ட புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்புயலின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது; அது கொண்டு வந்த கனழை மற்றும் வெள்ளத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஏராளமான விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
‘ரகாசா’ வலு குறையாமல் அடுத்து சீனாவின் குவாங்டோங் மாநிலத்தை நோக்கி நகர்கிறது.
அங்கு 7.7 லட்சம் பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.