![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-16-Dec-2024-01-14-PM-8925.jpg)
புத்ராஜெயா, டிசம்பர்-16, இவ்வாண்டு இந்தியாவிலிருந்து 10 லட்சம் சுற்றுப்பயணிகளைக் கவர வேண்டுமென்ற இலக்கில் மலேசியா வெற்றிப் பெற்றுள்ளது.
முதல் 11 மாதங்களிலேயே அவ்விலக்கை அடைந்திருப்பது குறித்து, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் (Datuk Seri Tiong King Sing) மகிழ்ச்சித் தெரிவித்தார்.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 71.7 விழுக்காடு அதிகமாகும்.
அதோடு, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன் 2019-ல் பதிவான எண்ணிக்கைகைக் காட்டிலும் இது 47 விழுக்காடு உயர்வாகும்.
இந்தியச் சுற்றுப் பயணிகளின் முக்கியத் தேர்வாக மலேசியா விளங்குவது இதன் மூலம் புலப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
கடந்தாண்டு டிசம்பரில் இலவச விசா நடைமுறை அறிமுகம் கண்டதே, இந்தியச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையின் அதிரடி உயர்வுக்குக் காரணமாகும்.
அப்புதியக் கொள்கை நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த கணிசமான வரவேற்புக் காரணமாக இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு இவ்வாண்டு பல்வேறு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பினாங்கு மற்றும் லங்காவிக்கான Indigo Airlines-சின் தினசரி நேரடி விமானச் சேவைகளும் அவற்றிலடங்கும்.
தொடந்து வலுவடைந்து வரும் இந்தியா – மலேசியா இடையிலான இந்த சுற்றுலா தொடர்பு, 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு வரை நீடிக்குமென டத்தோ ஸ்ரீ தீயோங் நம்பிக்கைத் தெரிவித்தார்.