
கோலாலம்பூர், ஏப்ரல்-8-SPM தேர்வில் 10 A-க்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இயல்பாகவே மெட்ரிகுலேஷன் (Matriculation) படிப்புக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என DAP வலியுறுத்தியுள்ளது.
அவ்விவகாரத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டுமென, DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்ய மற்ற மாணவர்களுக்கும், இடம் வழங்குவது குறித்து அரசாங்கம் உரிய பரிசீலனை செய்ய வேண்டுமென, நேற்றைய DPA மத்திய நிர்வாகச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மெட்ரிகுலேஷன், STPM-க்கு மாற்றாக வழங்கப்படும் பட்டப்படிப்புக்கு முந்தையக் கல்வித் திட்டமாகும்.
இதில் வழக்கமாக, 90% இடங்கள் புமிபுத்திரா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, 10% இடங்கள் பிற இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் 2024-ஆம் ஆண்டில், 10 A பெற்ற மாணவர்களுக்கு, வேறெந்த பின்புலமும் பார்க்காமல் நேரடியாகவே இடம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
பின்னர், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு A- மதிப்பெண் பெற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு கொள்கை விரிவாக்கப்பட்டது.
இந்த மாற்றத்தில் DAP-க்கும் பங்கிருப்பதாகக் குறிப்பிட்ட அந்தோணி லோக், அரசாங்கம் தொடர்ந்து தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.



