
கோலாலம்பூர், மே-29 – SPM தேர்வில் 11A பெற்ற சிறந்த மாணவி ஒருவருக்கு, மெட்ரிகுலேஷன் இடம் மறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி உண்மை நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.
அதனை உறுதிப்படுத்திய சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ், தேன்மலர் என்ற அந்த மாணவிக்கு ஏற்கனவே சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
அதோடு பெட்ரோனாஸ் நிறுவனத்தின் கல்வி உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
என்றாலும், விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்வதிலும் சமர்ப்பிப்பதிலும் சில குழறுபடிகள் நிலவியதால் இவ்விவகாரம் சிக்கலாகி விட்டதாக அவர் விளக்கினார்.
எனவே இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க, மாணவர்களும் பெற்றோர்களும் விண்ணப்பப் பாரங்களைப் பூர்த்திச் செய்யும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என குணராஜ் அறிவுறுத்தினார்.
ஆகவே, உண்மை நிலவரத்தை அறியாமல் கல்வி முறையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக அவசரப்பட்டு சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களைப் பரப்ப வேண்டாம் என அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகளுக்கு மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்காமல் பாலிடெக்னிக் தொழில் கல்விக்கு இடம் கிடைத்திருப்பதாக, சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை டிக் டோக்கில் வெளியிட்ட வீடியோ முன்னதாக வைரலானது.
இதையடுத்து, உயர் கல்வி அமைச்சு அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதனும் வலியுறுத்தியிருந்தார்.



