Latestமலேசியா

12 வயதில் காமிக் புத்தகம் வெளியிட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லிரோஷ் குமரன்

கோலாலம்பூர், மே-30–தங்களுக்குப் பிடித்த துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த வயதிலும் சாதனை படைக்கலாம் என்பதை நிரூபித்துள்ளார் 12 வயது சிறுவன் லிரோஷ் குமரன். ‘ஸ்ரீ பிந்தாங் அனைத்துலகப் பள்ளியில்’ பயிலும் இவர், மலேசியாவிலேயே மிக இளம் வயதில் தனது சொந்தக் காமிக் புத்தகத்தை வெளியிட்டதற்காகக் கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி “Youngest to Publish a Comic Book” என்ற பட்டத்துடன் ‘மலேசிய சாதனைப் புத்தகத்தில்’ இடம்பிடித்துள்ளார்.

மூன்று வயதிலிருந்தே வீட்டு சுவர்கள் இவருக்கு வெறும் சுவர்களாக இல்லை; அவை இவரது முதல் கான்வாஸ்களாக மாறின. குழந்தைகள் போல கையில் கிடைத்தவற்றைக் கொண்டு கிறுக்கத் தொடங்கிய இவர், பின்னர் குச்சி மனிதர்களையும் சிறு கதைகளையும் உருவாக்க ஆரம்பித்தார். அந்த எளிய வரைவுகளுக்குள் ஒரு தனித்துவமான கற்பனை உலகம் இருப்பதை முதலில் கவனித்தவர்கள் இவரது பெற்றோர்களே.

அந்த ஆர்வம் வெறும் குழந்தைச் சித்திரமாக மறையக்கூடாது என நினைத்த பெற்றோர்கள், 10 வயதில் இவரை முறையான ஓவியப் பயிற்சியில் சேர்த்தனர். அங்கே இவரது படைப்பாற்றல் சரியான திசையில் வளர்ந்து, சுவர்ச் சித்திரங்கள் கட்டமைப்பான கலைப் பயணமாக மாறின. அதன் தொடர்ச்சியாக இன்று காமிக்ஸ் உருவாக்கும் நிலையை எட்டியுள்ளார்.

இந்தப் பயணத்தில் இவரை ஊக்குவித்த முக்கிய காரணங்களில் ஒன்று உலகப் புகழ்பெற்ற யூடியூப் அனிமேட்டர்களின் படைப்புகள். குறிப்பாக Bryson Julian Rasmussen, இணையத்தில் “Haminations” என்ற பிரபல யூடியூப் சேனலின் படைப்பாளராக அறியப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த அவர், சிறுவயது அனுபவங்கள், நட்பு நிகழ்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட “Storytime” வகை கார்ட்டூன் அனிமேஷன்களால் உலகளவில் பிரபலமானவர். அவரது படைப்புகளைத் தொடர்ந்து ரசித்து வந்த லிரோஷ், அவரையே முன்மாதிரியாகக் கொண்டு தனது கற்பனைத் திறனையும் கதை சொல்லும் பாணியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கனவை உருவாக்கியுள்ளார்.

மூன்று மாத உழைப்பில் உருவான ‘எல்.கே. காமிக்ஸ்’ (LK’s Comic) புத்தகம் மூன்று நகைச்சுவைக் கதைகளைக் கொண்டுள்ளது. வரைவதில் பலமுறை தவறுகள் ஏற்பட்ட போதிலும் சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்து இந்தச் சாதனையை எட்டியதாக லிரோஷ் தெரிவித்தார். பள்ளி நாட்களில் படிப்பிலும், விடுமுறை நாட்களில் ஓவியத்திலும் கவனம் செலுத்தி நேரத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்தார். இவரது ஆசிரியர்களும் நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து கௌரவித்துள்ளனர். எதிர்காலத்தில் இதனை ஒரு கார்ட்டூன் அனிமேஷன் தொடராக மாற்றுவதே இவரது லட்சியமாகும்.

இந்தச் சாதனை குறித்து இவரது தாயார் யமுனா தேவி பேசுகையில், குடும்பத்தில் தேசிய அளவிலான விருதைப் பெறும் முதல் நபர் லிரோஷ் என்பதால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறினார். கணினிப் பொறியாளராக பணிபுரியும் தந்தை தேவ குமரன் மற்றும் தம்பி லித்வின் ஆகியோருடன் இணைந்து லிரோஷிற்கு முழு ஆதரவை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய பெற்றோர்களுக்கான தனது ஆலோசனையில், ஒவ்வொரு குழந்தையிலும் இருக்கும் தனித்துவமான திறமைகளை முதலில் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கலைகளை சாதாரணமாகக் கருதாமல், அது ஒரு வாழ்வியல் திறன் என்பதை உணர வேண்டும் என்றார். பிள்ளைகளுக்குப் பிடித்த துறைகளில் அவர்களை ஈடுபட அனுமதிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், ஆர்வமில்லாத கலைகளைச் சிறுவயதிலேயே திணிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இளம் திறமையாளர்களைத்தொடர்ந்து அடையாளம் கண்டு ஆதரவளித்து வரும் வணக்கம் மலேசியா நிறுவனத்திற்கும் இவர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இவரைப் போன்ற இளம் வயதில் காமிக் புத்தகத்தை உருவாக்கிய சாதனை மலேசியாவில் மிகவும் அரிதானது. குறிப்பாக இந்திய சமூகத்திலிருந்து இத்தகைய முயற்சி வெளிப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். இவரது பயணம் பலருக்கும் உண்மையான ஊக்கமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இவர் காமிக் துறையில் மட்டுமல்லாமல், தாம் தேர்ந்தெடுக்கும் எந்தத் துறையிலும் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உருவெடுப்பார் என்பது தற்போதே தெளிவாகிறது. இவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ந்த முயற்சி அதனை உறுதிப்படுத்துகின்றன. இளம் சாதனையாளருக்கு ‘வணக்கம் மலேசியா’ நிறுவனத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!