
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- 13-ஆவது மலேசியத் திட்டத்தை மே 13 இனக்கலவரத்துடன் தொடர்படுத்தி பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் சூளுரைத்துள்ளார்.
பெண்டாங் எம்.பி டத்தோ அவாங் Hashimமின் கூற்று அதிகபட்சமானது என்பதோடு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையிலானது.
அதனை மக்கள் மன்றத்தில் அவர் பேசியிருக்கக் கூடாது; எனவே, அவர் மீது மக்களவை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க ராயர் மீண்டும் வலியுறுத்தினார்.
13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசி அவாங் ஹஷிம், அதில் பூமிபுத்ராக்களின் மேம்பாட்டுக்கான இலக்கிடப்பட்டத் திட்டங்கள் எதுவும் இல்லையெனக் குறைக் கூறினார்.
“சீனர்களின் கம்போங் பாரு புது கிராமங்களின் மறுசீரமைப்புக்கென தனியாக திட்டம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் பிரச்னையாக்கவில்லை; ஆனால், பூமிபுத்ராக்களுக்கு ஏன் தனித் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை?” என அவர் கேட்டார்.
இதுவோர் அப்பட்டமான புறக்கணிப்பு என்றும், பூமிபுத்ராக்களுக்கு எதிரான இது போன்ற பொருளாதார அழுத்தங்களால் தான் மே 13 இனக்கலவரம் வெடித்ததாகவும் சர்ச்சைக்குரிய வகையில் அவாங் ஹஷிம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், அவாங் ஹஷிமின் பேச்சை விட, அதை கண்டும் காணாமலிருக்கும் எதிர்கட்சியினரின் செயலை செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் சாடியுள்ளார்.
வெறுப்புணர்வைத் தூண்டுவதோடு, இனங்களுக்கு இடையிலான மோதலை உண்டாக்கும் வகையில் தங்களின் ‘பங்காளி’ பேசியுள்ளார்; ஆனால், கெராக்கான், உரிமை, MIPP, Malaysian Advancement Party உள்ளிட்ட கட்சியினர் வாய் மூடி மௌனியாக உள்ளனர்.
இது வியப்பையும் வேதனையையும் தருவதாக லிங்கேஷ்வரன் சாடினார். இது தான் இந்தியர்களுக்கும், மலாய்க்காரர் அல்லாதோருக்கும் இவர்கள் போராடும் லட்சணமா என கேட்ட லிங்கேஷ்வரன், பெரிக்காதான் கூட்டணியுடனான உறவை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.