
பாசீர் கூடாங், ஏப்ரல்-13, TVET எனப்படும் தொழில்நுட்பம், தொழில் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
இளையோர் குறிப்பாக வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அது எளிதில் கிடைப்பது அவசியமென, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ Dr ஆர். நெல்சன் கூறினார்.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக ம.இ.கா, அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள பரிந்துரைகளில் அதுவும் ஒன்றாகும்.
கல்வி, வேலை வாய்ப்புகள், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்றவற்றில் கவனமும் செலுத்தும் பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
அரசாங்கத் துறையில் மோசமான நிலையில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரும் நீண்ட காலக் கோரிக்கையும் அதிலடக்கமென, நெல்சன் கூறினார்.
குறிப்பிட்ட நிதி திட்டங்கள் மூலம் இந்திய தொழில்முனைவோருக்கு சிறந்த ஆதரவை வழங்க நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்றார் அவர்.
ஜோகூர் பாசீர் கூடாங்கில் 16 வயதுகுட்பட்டவர்களுக்கான தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கிண்ண தேசியக் கால்பந்துப் போட்டியை நேற்று தொடக்கி வைத்த பிறகு டத்தோ நெல்சன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இவ்வேளையில், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு திறமையான பணியாளர்களைத் தயார் செய்வதில் மாநில அரசு முக்கிய கவனம் செலுத்தும் துறைகளில் TVET-டும் அடங்குமென, ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி கூறினார்.
“ஜோகூரில், மாநிலத்தின் தொழில்முனைவோர் பிரிவின் கீழ், அதிக ஊதியம் தரும் வேலைகளுக்கு நமது இளைஞர்களைத் தயார்படுத்துவதற்காக ஏற்கனவே பயிற்சித் திட்டங்களை நடத்தி வருகிறோம் – சிலர் RM3,000 முதல் RM5,000 வரை சம்பளம் வாங்குகிறார்கள்” என்றார் அவர்.
ஆனால் இதற்கு தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப முறையான திறன் பயிற்சி தேவைப்படுவதாக ரவின் சொன்னார்.