
உலு சிலாங்கூர், மே-18-பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தேர்தல் இயந்திரம், நேற்று குவாலா குபு பாரு, Kem Bina Semangat வளாகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.
PN கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான பாஸ், பெர்சாத்து மற்றும் கெராக்கான் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 400 தேர்தல் பணியாளர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, கூட்டணியின் ஒற்றுமையையும் தேர்தல் ஆயத்தப் பணிகளையும் வெளிப்படுத்தும் தளமாக அமைந்தது.
இந்நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹமாட், மலாய் வாக்காளர்களின் ஆதரவு PN கூட்டணிக்கு இன்னும் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
அதோடு, பாஸ் ஆதரவாளர் பேரவை (DHPP) மற்றும் மலாய்க்காரர் அல்லாத பிற அங்கத்துவ அமைப்புகள் PN மற்றும் பாஸ் தொடர்பான உண்மைகளைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் Hasnizam Harun பேசுகையில், தங்களின் கீழ் உள்ள 2 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதோடு, இம்முறை குவாலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியையும் கூடுதலாகக் கைப்பற்றுவதே தங்களின் முதன்மை இலக்கு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் பேசியத் தலைவர்கள் பெரும்பாலும் 16-ஆவது பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் வாக்கில் நடத்தப்படலாமென்றும் ஆருடம் கூறினர்.
நாட்டு நடப்புகளை கவனிக்கும் போது அதற்கான சாத்தியங்கள் தெளிவாகத் தெரிவதாக அவர்கள் கூறினர்.



