Latestமலேசியா

நவீன் கொலை வழக்கு; அக்டோபரில் 8 நாட்களுக்கு விசாரணை

ஜார்ஜ்டவுன், ஜூலை-3-டி. நவீன் என்ற இளைஞரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு ஆடவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு நடைபெறவிருப்பதாக பினாங்கு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதி Radzi Abdul Hamid விசாரணையைத் தலைமை தாங்கி நடத்துவார். அக்டோபர் 7 முதல் 9 வரையிலும், பின்னர் 12 முதல் 16 வரையிலும் விசாரணை நடத்தப்படும்.

இம்மாதம் 13 ஆம் தேதி இணையம் வாயிலாக விசாரணை நடைபெறும் என அரசு துணை வழக்கறிஞர் Amril Johari தெரிவித்தார்.

18 வயதான நவீன் மோசமாகத் தாக்கப்பட்டதால் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

அச்சம்பவம் பகடி வதை, ஓரின வன்முறைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பெரும் சீற்றத்தைத் தூண்டியது.

2017 ஜூன் 9 ஆம் தேதி இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரை, புக்கிட் கெலுகோரில் ஜாலான் காகி புக்கிட்டில் உள்ள கர்பால் சிங் கற்றல் மையத்திற்கு அருகில் அவர் கொடுரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 35 வயது எஸ். கோபிநாத், 27 வயது ஜே. ராகேசுதன், 27 வயது எஸ். கோகுலன் மற்றும் குற்றம் நடந்த நேரத்தில் சிறுவர்களாக இருந்த மேலும் இருவர், 2023 அக்டோபர் மாதம் உயர் நீதிமன்றத்தால் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் விடுதலையை ரத்து செய்து, அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு உத்தரவிட்டது.

இருப்பினும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களால் கோபிநாத்தைக் கண்டுபிடித்து, அவருக்கு மேல்முறையீட்டு அறிவிப்பை வழங்க முடியாததால், விசாரணை தாமதமானது.

மற்ற நால்வர் மீதான வழக்கு விசாரணையைத் தொடர அனுமதிக்கும் வகையில், கோபிநாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு அறிவிப்பை இரு வாரங்களுக்கு முன் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!