
சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.17-பஹாங், புக்கிட் திங்கியில் Bharmarishi கோவிலின் வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவில் பிரச்சனைகளை எங்களால் தீர்க்க முடியும். தேவையிலாமல் பிற சமயத்தினர் வழிபாட்டு தளங்களைச் சேதப்படுத்துவது ஏன் என தேசியத் தலைவர் சங்க பூஷன் ஶ்ரீ காசி தங்க கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, வழிபாட்டுச் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் எந்தவொரு சிசிடிவி பதிவோ அல்லது சாட்சிகளோ கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோயிலில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பஹாங் மாநிலக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் Azri Akmar Ayob தெரிவித்தார்.
மதத்தின் புனிதப் பொருளை அவமதித்ததற்காகத் தண்டனைச் சட்டத்தின் கீழும், கட்டமைப்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து நேற்று மூன்று புகார்கள் பதிவு செய்யப்பட்டன . 49 வயதுடைய பாதுகாவலர், 45 வயதுடைய மதகுரு மற்றும் 41 வயதுடைய நபர் என மூவர் அப்புகார்களைக் கொடுத்திருந்தனர்.
இவ்வேளையில், ஆலய சிலைகள் உடைக்கப்பட்ட காணொளி முன்னதாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



