
கோலாலம்பூர், அக்-2–குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவதற்கு முன், உணவகத் துறையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS அரசாங்கத்தை அவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு மூலப்பொருட்களின் விலையை, குறிப்பாக உணவகங்கள் அன்றாடம் பயன்படுத்தும் புதிய மற்றும் ஈரச் சந்தைப் பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என PRIMAS தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி@சுரேஷ் தெரிவித்தார். அதனால் உணவக உரிமையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதுடன், செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிப்பதும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதும் சிரமமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை PRIMAS உணர்ந்திருக்கிறது. என்றாலும் குறைந்தபட்ச ஊதியத்தில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும், வணிகங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மூலப்பொருள் விலை உயர்வால் உணவகத் துறைக்கு ஏற்படும் கூடுதல் சுமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கவனமாக ஆராயப்பட வேண்டும்.
எனவே, அக்காரணங்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜே. கோவிந்தசாமி வலியுறுத்தினார்.



