
கோலாலம்பூர், நவ19-புடு நகர்ப்புற உருமாற்று மையத்தில் (UTC) கடப்பிதழ் உறையைத் திருடியதாக குடிநுழைவு அதிகாரி ஒருவர் தம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட 28 வயது இல்லத்தரசி ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மற்றவர்களுக்கு மனதைக் காயப்படுத்தும் நோக்கில் தெரிந்தே பொய்யான தகவலை உருவாக்கிப் பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும் Tun Nur Syalisa Muhamad Yusni எனும் அப்பெண் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அப்பதிவு ஆகஸ்ட் 21ஆம் தேதி ‘LisaYusni’ என்ற கணக்கில் Threads தளத்தில் வெளியிடப்பட்டது.
அக்குற்றச்சாட்டு, 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233(1)(a)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அரசு தரப்பு 20,000 ரிங்கிட் ஜாமீன் கோரிய நிலையில், பிரதிவாதி தரப்பு அவரது குடும்பத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு 3,000 ரிங்கிட்டாகக் குறைக்குமாறு கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு உள்ளூர் நபரின் உத்தரவாதத்துடன் 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க உத்தரவிட்டதுடன், வழக்கு முடியும் வரை கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதித்தார். வழக்கின் அடுத்த விசாரணை மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 11ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.
வைரலான பதிவைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி குடிநுழைவுத் துறை காவல் துறையில் புகார் அளித்திருந்தது. அதன் தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban, சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாக முன்னதாகத் தெரிவித்திருந்தார்.



