Latestமலேசியா

அன்வார், மக்ரோன் ஆலய வருகை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – செனட்டர் லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், நவம்பர் 19 — பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தது குறித்து ஆலய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தைக் கருத்தில் கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 17ஆம் தேதி இரு தலைவர்களும் முன்னறிவிப்பின்றி ஆலயத்திற்கு வந்ததாக அதன் தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா விளக்கமளித்ததை லிங்கேஸ்வரன் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார். இருவரும் ராஜகோபுரத்தின் கீழுள்ள வெளித் தாழ்வாரத்தில் மட்டுமே இருந்தனர். பிரதான வழிபாட்டுப் பகுதிக்கோ சந்நிதிக்கோ அவர்கள் செல்லவில்லை என நடராஜா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிய படங்களையும் காணொளிகளையும் மட்டும் வைத்து, இரு தலைவர்களும் இந்து சமயத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டுவது நியாயமல்ல என லிங்கேஸ்வரன் கூறினார்.

ஆலயப் படிகளில் விளையாட்டுக் காலணிகள் அணிந்து உடற்பயிற்சி செய்வோரைத் தாமே பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆலய மரபுகளையும் விதிமுறைகளையும் வருகையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிப்பது நிர்வாகத்தின் பொறுப்பு. இனம், பதவி, அந்தஸ்து பாராமல் அந்த விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவருமான அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவின் பன்முகப் பண்பாட்டையும் இந்து சமூகத்தின் பாரம்பரியத்தையும் பிரான்ஸ் அதிபருக்கு அறிமுகப்படுத்த பிரதமரே முன்வந்ததைப் பாராட்ட வேண்டும் என லிங்கேஸ்வரன் தெரிவித்தார். இரு தலைவர்களின் வருகையை ஆலய நிர்வாகமே வரவேற்றுள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!