Latestமலேசியா

இந்து இதிகாசங்களைப் பாராட்டி, இந்தியர்களுக்கு எதிரான இனவெறியைக் கண்டித்த நியூயார்க் மேயர் Mamdani!

நியூயார்க், நவ19-நியூயார்க் நகர மேயர் Zohran Mamdani, தமது அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் தெற்காசிய சமூகங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வைக் கண்டித்தார். அத்துடன், ராமாயணம், மகாபாரதம் ஆகிய இந்து இதிகாசங்களின் சிறப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.

நியூயார்க் நகரின் முதல் இந்திய-அமெரிக்க மேயராக, மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவது பெரும் கௌரவமாக இருப்பதாகக் குறிப்பிட்ட 35 வயதான Mamdani, தனது சிறுவயதில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

ராமாயணம் சிறந்த சகோதரர், கணவர், மனைவி மற்றும் நண்பராக வாழ்வதற்கான வழிகளைக் கற்றுத் தருவதாகவும், மகாபாரதம் குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் தர்மத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஓராண்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்புச் சம்பவங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்து ஆலயம் ஒன்றின் மீதான தாக்குதல், சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள், தேர்தல் பிரசாரங்களில் தெற்காசியர்களைக் குறிவைத்துப் பேசப்பட்ட கருத்துகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர், இத்தகைய வெறுப்புணர்வை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என்றார்.

மேலும், இந்து-அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வாழ்வதுடன், தங்கள் மத நம்பிக்கைகளின்படி வழிபடுவதற்கான உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும் என Mamdani வலியுறுத்தினார். இதற்கு முன் துர்கா பூஜைக் கொண்டாட்டத்தின்போது இந்து சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

இதனிடையே, சியாட்டிலில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இடையூறு, வெறுப்புக் குற்றமாகுமா என விசாரிக்குமாறு அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் 13 உறுப்பினர்கள் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை X தளத்தில் தெற்காசியர்களைக் குறிவைத்து 5.42 லட்சத்துக்கும் அதிகமான வெறுப்புப் பதிவுகள் கண்டறியப்பட்டதாக ஆய்வு ஒன்றையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!