
சிரம்பான், நவ.20-டத்தோ இஸ்மாயில் லாசிம், Yang Dipertuan Besar Tuanku Muhriz Tuanku Munawirரின் உத்தரவின்படி நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிப்பார். மாநில நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதிப்படுத்தத் தமது பணிகளைத் தொடருமாறு Tuanku Muhriz அறிவுறுத்தியதாக இஸ்மாயில் தெரிவித்தார். இன்று Istana Hinggapப்பில் இஸ்மாயிலைச் சந்திக்க Tuanku Muhriz அனுமதி அளித்திருந்தார்.
நவம்பர் 16ஆம் தேதியிட்ட தமது பதவி விலகல் கடிதம் குறித்த செய்திகளை மறுத்த அவர், அக்கடிதத்தை Tuanku Muhrizசிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும், சமர்ப்பிக்க ஒப்புதலும் வழங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். முழு அர்ப்பணிப்புடன் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதாகவும் இஸ்மாயில் லாசிம் உறுதியளித்தார்.
Juasseh சட்டமன்ற உறுப்பினரான இஸ்மாயில் பதவி விலகியதாக கடந்த திங்கட்கிழமை செய்திகள் வெளியாகின. அதனை அடுத்து, Barisan Nasional (BN) தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi, இஸ்மாயில் கட்சியின் அறிவுறுத்தலின்றி தாமாகவே பதவி விலக செய்ய முடிவெடுத்ததாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இஸ்மாயிலின் பதவி விலகல் கடிதம் ஒரு சட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவரிடமிருந்து கிடைத்ததாகவும், அதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் நெகிரி செம்பிலான் அரண்மனை தெரிவித்திருந்தது. மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசாரின் பதவி விலகல் கடிதம் Yang Dipertuan Besarரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவரது ஒப்புதல் கிடைத்த பின்னரே நடைமுறைக்கு வரும் என்றும் அரண்மனை விளக்கியது.
இவ்வேளையில், இஸ்மாயிலின் பதவி விலகல் தொடர்பான தகவலை அரண்மனைக்கு முன்பே BN ஏன் அறிவித்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநில அரசியலமைப்பு நெருக்கடியில் தனது தந்தை பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயிலின் மகனும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.



