Latestமலேசியா

உலக மக்களின் அன்பைப் பெற்ற நீர்யானை Fiona இறந்தது: தொப்பியை அகற்றும் முயற்சிகள் தோல்வி!

வாஷிங்டன், நவ.20-சமூக ஊடகங்களில் தனது குறும்புத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற ஒன்பது வயது நீர்யானை Fiona, தற்செயலாக விழுங்கிய கம்பளித் தொப்பியை அகற்ற மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவ முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இறந்தது. அத்துயரச் செய்தியை அமெரிக்காவின் Cincinnati விலங்கியல் பூங்கா அறிவித்ததுள்ளது.

கடந்த வாரம் ஒரு பின்னல் தொப்பியை Fiona தவறுதலாக விழுங்கியதால், அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன் உணவையும் தவிர்க்கத் தொடங்கியது. அதனை கால்நடை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து, மருந்துகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்கினர். தொப்பியை வெளியேற்ற பல முயற்சிகளைச் செய்தனர்.

அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத நிலையில், மயக்க மருந்து செலுத்தி, நீண்ட மருத்துவக் கருவி மூலம் தொப்பியை அகற்றவும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், எதுவும் பலனளிக்கவில்லை. Fionaவைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தும், அதனை உயிருடன் மீட்க முடியவில்லை என விலங்கியல் பூங்கா வருத்தம் தெரிவித்தது.

Fionaவின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகளையும் ஆதரவையும் பகிர்ந்தனர். நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில், அது இறந்த செய்தி விலங்குப் பிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஜனவரியில் குறைப்பிரசவத்தில் பிறந்த Fiona, Cincinnati விலங்கியல் பூங்காவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் நைல் நீர்யானையாகும். ஆரம்பத்தில் எழுந்து நிற்கவும் தாயிடம் பால் குடிக்கவும் சிரமப்பட்ட அது, பின்னர் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து உலகப் புகழ்பெற்றது. தனது தம்பி Fritzசுடன் தர்பூசணி சாப்பிடுவது, நீரில் விளையாடுவது போன்ற காணொளிகள் மூலம் கோடிக்கணக்கானோரின் அன்பைப் பெற்றிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!