
கோலாலம்பூர், நவ-20 இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் விசா இல்லா நுழைவு சலுகை டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 1, 2027 முதல் மலேசியா வர இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் செல்லுபடியாகும் விசா பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மாரான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், இந்தியப் பயணிகளை மலேசியா வருவதற்கு முன்பே கூடுதல் பரிசோதனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறை நவம்பர் 17-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, விசா விண்ணப்பங்களை டிசம்பர் 1 முதல் MyVISA இணையவழி தளத்தில் சமர்ப்பிக்கலாம்.
இருப்பினும், புதுடெல்லியில் உள்ள மலேசியத் தூதரகம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் இந்த விலக்கு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும், மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு திறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
வேலைவாய்ப்பு முகவர்கள் சிலர் மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், இதனால் அவர்கள் விசா காலத்தை மீறித் தங்குதல், தடுப்புக் காவல் மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் செப்டம்பரில் எச்சரித்திருந்தது.
கோவிட்-19க்குப் பிறகு சுற்றுலாவை ஊக்குவிக்க 2023 டிசம்பரில் இந்த விசா விலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-ல் 1.56 மில்லியன் இந்தியர்கள் மலேசியா வந்தனர்; இது 2024-ஐ விட 14.6% அதிகம். 2024-ல் இந்தியப் பயணிகள் மலேசியாவில் RM6.11 பில்லியன் செலவிட்டனர்.
ஆனால், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிலிருந்து வந்தோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.8% குறைந்து 1.08 மில்லியனாகப் பதிவானது. இந்தியா மலேசியாவின் முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாகத் தொடர்கிறது.



