
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-20,இராணுவ விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி, 4.8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், அரச மலேசிய ஆகாயப்படை அதிகாரிகள் ஐவர் உட்பட 11 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 17-ஆம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவானில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் அவர்கள் கைதாகினர்.
96.64 கிலோ கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபகற்ப மலேசியாவிலிருந்து சபாவுக்கு இராணுவ விமான வசதிகள் மூலம் போதைப்பொருளைக் கடத்தி, பின்னர் பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு விநியோகிக்க அக்கும்பல் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் அக்கும்பல் செயல்பட்டு வந்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கைதான ஐந்து ஆகாயப்படை அதிகாரிகளும் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அக்கும்பலின் முக்கியத் தலைவனாகச் சந்தேகிக்கப்படும் மற்றோர் உள்ளூர் ஆடவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.



