
ஈப்போ, நவம்பர்-20,பேராக், பந்தாய் ரெமிஸில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 14-ஆம் தேதி, பிற்பகல் ஒரு மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
குழந்தையின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு கத்திக்குத்துக் காயங்கள் கண்டறியப்பட்டதாகப் பேராக் போலீஸ் தலைவர் டத்தோ Alwi Zainal Abidin தெரிவித்தார்.
குழந்தையைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் அப்பெண், பின்னர் தனது காதலனின் உதவியுடன் குழந்தையின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தனது தோழியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தோழி போலீஸில் புகார் செய்துள்ளார்.
அதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்குற்றம் தொடர்பான விசாரணைக்காக இருவரும் நவம்பர் 23-ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் மனநிலையைக் கண்டறிய மனநலப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.



