
ஷா ஆலாம், ஜூலை-3-ரொக்கம் மற்றும் தங்க நகைகள் தொடர்பாக ஷா ஆலாம் sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுத்து பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஒருவர் விசாரணை கோரியுள்ளார்.
பெண் ஒருவரின் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 550 பணத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டதாக 50 வயது வெண்மணி என்ற அந்த ஆசிரியை மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதே பெண்ணிடமிருந்து தங்க நகைகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பண மோசடித் தடுப்பு, பயங்கரவாத நிதியளிப்புத் தடுப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட வருமானம் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் கீழ் வெண்மணி மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் கிடைத்த வருமானத்தின் மதிப்பில் ஐந்து மடங்குக்குக் குறையாத அபராதமும் அல்லது RM5 மில்லியன் அபராதமும் விதிக்கப்படலாம். இதில் எது அதிகமோ அதுவே விதிக்கப்படும்.
அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் 30,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கப்பட்டது. இருப்பினும், வெண்மணி தற்போது வேலையில்லாமல் இருப்பதாகக் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து பிணைத் தொகை 15,000 ரிங்கிட்டாகக் குறைக்கக்கப்பட்டது.
அவ்வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



