Latestஉலகம்

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை; மசோதாவை நிறைவேற்றி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் அதிரடி

சிட்னி, நவம்பர்-29, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ள முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழ்கிறது.

உலகிலேயே அத்தகைய முதல் சட்ட மசோதாவை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியது.

அத்திட்டம் குறித்து மாதக்கணக்கில் பொதுமக்கள் மத்தியில் விவாதங்கள் சூடுபிடித்திருந்த நிலையில், ஒரே வாரத்தில் மசோதாவைத் தாக்கல் செய்து, விவாதித்து நிறைவேற்றியும் உள்ளது ஆஸ்திரேலிய அரசு.

அப்புதியச் சட்டத்தின் கீழ், வயது குறைந்த சிறார்கள் சமூக ஊடகங்களில் நுழைவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தவறினால் 32 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வரும் ஜனவரியில் சோதனை முறையில் அமுலாக்கம் காணும் இச்சட்டம், முழுமையாக நடைமுறைக்கு வர ஓராண்டு ஆகலாமெனக் கூறப்படுகிறது.

தற்போதைக்கு, Facebook, Snapchat, Tik Tok, Instagram, X, Reddit ஆகியவற்றை அத்தடை உட்படுத்தும்.

வரும் காலங்களில் அத்தடை மற்ற சமூக ஊடகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

சமூக ஊடகங்களில் பகடிவதை, மோசடிகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை பரவலாக நடைபெறுவதோடு, பயனர்களையும் அவை பெரும் மன அழுத்தத்திற்கும் இட்டுச் செல்வதால், இது போன்ற தைரியமான நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என, ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களால் எழும் பிரச்னைகளுக்குத் தீர்வாக மற்ற நாடுகள் சில கட்டுப்பாடுகளை விதிப்பதோடு நிறுத்திக் கொண்டு விட்ட நிலையில், ஆஸ்திரேலியா சட்டப்பூர்வமாக அதனை அணுகியுள்ளது.

அதுவும் விதிமீறல்களுக்கு சமூக ஊடகங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வைத்த ஆஸ்திரேலிய அரசின் தூணிச்சல் சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!