
கோலாலம்பூர், அக்டோபர்-24,
நாட்டில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு, தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சியை ஆதரித்துள்ளனர்.
இளம் வயதில் சமூக ஊடகங்கள் மனநலத்திற்கும் கல்விக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன; எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த வயதுக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டுமென, ஜூலாவ் எம்.பி லேரி சிங் (Larry Sng) வலியுறுத்தினார்.
பெந்தோங் உறுப்பினர் Young Syefura Othman அக்கருத்தை ஆமோதித்தார்.
2026 வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போது அவர்கள் அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்றனர்.
இந்த உத்தேசத் திட்டத்தின் கீழ், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டோக் போன்ற தளங்கள் பயனர்களின் வயதை உறுதிங் செய்யும் eKYC அடையாள சரிபார்ப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
அதே நேரத்தில், அரசாங்கம் 16 வயதுக்குக் குறைவான மாணவர்கள் பள்ளிகளில் விவேகக் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பள்ளி வன்முறைகள் மற்றும் இணைய துன்புறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது; என்றாலும் செயல்படுத்தும் முன் மக்களின் கருத்துகளும் கேட்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.



