
புக்கிட் ஜாலில், மார்ச்-12-ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புன்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து 2 ஹெக்டருக்கு மேல் பரவியுள்ளது.
தீ மாலை சுமார் 4.12 மணியளவில் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தெரிவித்தது.
தொடக்கத்தில் சுமார் 0.3 ஹெக்டர் பரப்பளவில் இருந்த தீ, பின்னர் காற்றின் வேகம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் பரவியது.
மலை உச்சியில் தீ கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள், குறிப்பாக புத்ராஜெயாவிலிருந்து வரும் MEX நெடுஞ்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து ஸ்ரீ கெம்பாங்கான், பூச்சோங், சுபாங் ஜெயா மற்றும் சைபர்ஜெயா நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்கு அருகே தீ பரவாமல் தடுக்க firebreak எனப்படும் பாதுகாப்பு தடுப்பு கோடு அமைத்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை உயிரிழப்பு அல்லது வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



