
2017 கம்போங் டத்துக் கெராமாட் தாபிஸ் சமயப்பள்ளி தீ விபத்து; நிர்வாகமும் MAIWPமும் அலட்சியம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி 11 –
கடந்த 2017 ஆம் ஆண்டு, Kampung Datuk Keramat Tahfiz சமய பள்ளி தீப்பிடித்த விவகாரத்தில், 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனிடையே, அந்த tahfiz மையத்தின் நிர்வாகமும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய மத விவகார கவுன்சிலுமான MAIWP தங்களின் கடமைகளை முறையாக நிறைவேற்றத் தவறியுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த அலட்சியத்தால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரிங்கிட் துயர இழப்பீடாகவும், 30,000 ரிங்கிட் குறியீட்டு இழப்பீடாகவும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மனுதாரர்களுக்கு மொத்தமாக 500,000 ரிங்கிட் இழப்பீடு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஒவ்வொரு மனுதாரருக்கும் 20,000 ரிங்கிட் வழக்குச் செலவாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தீ விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் வழங்கியதாக கூறப்படும் 8 மில்லியன் ரிங்கிட் முதல் 10 மில்லியன் ரிங்கிட் வரை நன்கொடைகளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
அந்த நன்கொடைகள் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்பதற்கான போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என நீதிபதி விளக்கினார்.
இந்த தீர்ப்பில் அதிருப்தியடைந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர்களின் சட்ட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
2017 செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த இந்த தீ விபத்து, 23 உயிர்களை காவு கொண்டதுடன், பதிவு செய்யப்படாத மதப் பள்ளிகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் பொறுப்புத்தன்மை குறித்து நாடு முழுவதும் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியது.



