
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-1 – பினாங்கில் தேங்காய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இவ்வாண்டு தைப்பூச விழாவிற்கு உடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையை பக்தர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் ச்சௌ கொன் இயோவ் (Chow Kon Yeow) அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தேங்காய் உடைப்பைக் குறைக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அண்மையில் வைத்த கோரிக்கையை அவர் ஆமோதித்தார்.
பினாங்கு தைப்பூசத்தில் தேங்காய் உடைப்பது ஒரு முக்கியமான பாரம்பரியமாக இருந்தாலும், தற்போது தேங்காய் கையிருப்பில் தட்டுப்பாடு நிலவுவதை பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
மக்களுக்கான உணவு உத்தரவாதம் பாதிக்காத வகையில், தேங்காய் உடைப்பில் பக்தர்கள் சிக்கனமாக இருப்பது சிறந்தது என, முதல் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வட மாநிலங்களுக்கான மிகப்பெரிய தேங்காய் விநியோகிப்பாளர்களில் ஒன்றான ‘அன்பா தேங்காய் டிரேடிங்’ (Anba Coconut Trading), விளைச்சலில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி காரணமாக இவ்வாண்டு தைப்பூசத்திற்கு தேங்காய்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியதை அடுத்து கொன் இயோவ் அவ்வாறு சொன்னார்.
பற்றாக்குறையால், உள்ளூர் தேங்காய்கள் இப்போது பினாங்கின் சில பகுதிகளில் தலா 3 ரிங்கிட் 90 சென் வரை விற்கப்படுகின்றன;
முன்பு 2 ரிங்கிட் 50 சென் முதல் 2 ரிங்கிட் 60 சென் வரை மட்டுமே இருந்தது.