
குவாலா சிலாங்கூர், பிப்ரவரி-15 – தோட்டத் தொழிலாளர்களும் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் அரசாங்கத்தின், 75 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் PRR Harmoni Madani Bestari Jaya குடியிருப்புத் திட்டம் நனவாகவுள்ளது.
கூட்டரசு அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டும், மாநில அரசாங்கம் 35 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கிய நிலையில் Berjaya Corporation 20 ஏக்கர் நிலம் வழங்கியது.
குவாலா சிலாங்கூரில் 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 குடும்பங்கள் பயன் பெறும் விதமாக இந்த வீடமைப்புப் திட்டம் உருவாகிறது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே இன்று நேரில் கலந்து சிறப்பித்தார்.
அவ்வீடமைப்புத் திட்டமானது, Ladang Mary, Ladang Nigel Garder, Ladang Bukit Tagar, Ladang Sungai Tinggi, Ladang Minyak ஆகிய 5 தோட்டங்களையும் சேர்ந்த மக்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
இனிவரும் காலங்களில் தோட்டக் குடியிருப்புகளுக்கான ஒரு முன்மாதிரி திட்டமாக இந்த
PRR Harmoni MADANI Bestari Jaya அமைய வேண்டுமென டத்தோ ஸ்ரீ அன்வார் விருப்பம் தெரிவித்தார்.
பல அமைச்சர்கள் மாறியும் முடியாதத் திட்டத்தை, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் முடித்துக் காட்டத் துணிந்திருப்பதையும் பிரதமர் பாராட்டினார்.
இவ்வேளையில், இக்குடியிருப்புத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கனவு என்பதால், 18 முதல் 24 மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஙா கோர் மிங் கூறினார்.
மேம்பாட்டு நிறுவனமாக PR1MA இருப்பதால், அதன் அனுபவம் இப்புதியக் குடியிருப்பின் கட்டுமானத்தைக் குறித்த நேரத்தில் முடிக்க உதவும் என எதிர்பார்க்கிறோம்.
தரமான சொந்த வீட்டைக் கொண்டிருப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; எனவே மலேசியர்களின் அக்கனவை நிறைவேற்றுவதில் தமதமைச்சு முழு மூச்சாக செயல்படுமென ஙா கோர் மிங் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசாரும் கலந்து கொண்டார்.
இந்த PRR டேரஸ் வீடமைப்புப் திட்டத்தில், ஒவ்வொரு வீடும் தலா 3 படுக்கை அறைகள், 2 குளியறைகள், வரவேற்பறை, சமயலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வதிகளைக் கொண்டுள்ளது.
KPKT அமைச்சு, நிதி அமைச்சு, சிலாங்கூர் அரசு ஆகியவற்றின் வியூக ஒத்துழைப்பின் வாயிலாக 75 மில்லியன் ரிங்கிட் செலவில் அக்குடியிருப்பு நிர்மாணிக்கப்படுகிறது.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் தலா 45,000 ரிங்கிட் விலையில் அவை விற்கப்படும்.