கோலாப்பிலா , டிச 17 – 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்துவதற்கு நெகிரி செம்பிலான் திட்டமிடவில்லையென அம்மாநில மந்திரிபெசார்
டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் உட்பட இந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு , விரயத்தைத் தவிர்ப்பதுடன், இஸ்ரேலால் தொடர்ந்து ஒடுக்கப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாகவும் இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், இது அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தனியார்துறையைப் பொறுத்ததாகும். சில நேரங்களில் அவர்கள் சுற்றுப் பயணிகள் அல்லது அவர்களின் விருந்தினர்களை மிதமான முறையில் பட்டாசுகள் வெடித்து மற்றும் எளிமையான கொண்டாட்டத்தின் மூலம் ஈர்க்க ஏற்பாடு செய்யும் திட்டத்தை கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் வழக்கம் போல், மசூதிகள் மற்றும் வழிபாட்டு மையங்களில் அனைவரும் பிரார்த்தனை செய்யலாம் மற்றும் யாசின் ஓதலாம் என்று கோலா பிலா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கிய பின்னர்
அமினுடின் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே கெஅடிலான் உயர் தலைமைத்துவம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் கட்சியில் தேர்தல் நடைபெறும் என நெகிரி செம்பிலான் மாநில பி.கே.ஆர் தலைவருமான அமினுடின் தெரிவித்தார். ஜனநாயகத்தின் நிலைநாட்டப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப தலைமை மாற்றத்தை செயல்படுத்த, கட்சியின் தேர்தல் செயல்முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.