போர்டிக்சன், நவம்பர்-16 – 50 விழுக்காடு மலாய் மொழி 50 விழுக்காடு ஆங்கில மொழி பயன்பாட்டுடன் பாலர் பள்ளிகளுக்கான புதியப் பாடத்திட்டம் 2026-ல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அப்புதியப் பாடத்திட்ட அமுலாக்கத்திற்கான அளவுகோலாக, அனைத்து நிலைகளிலும் உள்ள பாலர் பள்ளிகளின் கல்வித்திட்டத்தை தமது தரப்பு நன்காராய்ந்து வருவதாக, கல்வியமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார்.
கல்வியமைச்சின் (KPM) கீழ் செயல்படும் பாலர் பள்ளிகள், KEMAS பாலர் பள்ளிகள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் Tabika Perpaduan பாலர் வகுப்புகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
மாணவர்களிடையே பண்புகளை உருவாக்குவதிலும் புதியப் பாடத்திட்டம் முன்னுரிமை வழங்கும் என்றார் அவர்.
அதே சமயம், அனைத்து பாலர் வகுப்பு ஆசிரியர்களும் தங்களின் அதிகபட்ச கல்வித்தகுதியாக இளங்கலைப் பட்டத்தைக் கொண்டிருப்பது உறுதிச் செய்யப்படும்.
ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கும் கல்விக் கொள்கை நம்மிடம் இல்லாததால், பாலர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சவாலாக உள்ளது.
தற்போது 91.7 விழுக்காடாக இருக்கும் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க ஏதுவாக, பெற்றோர்களை ஊக்குவிக்க KPM கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஃபாட்லீனா சொன்னார்.