
கோலாலம்பூர், அக்-16-2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மனித மூலதன மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை மனித வள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) வரவேற்றுள்ளது. பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தி, தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து ஆதரவளிக்கவிருப்பதாக மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள பணியாளர்களில் 35 விழுக்காட்டினரைத் திறன்மிக்க பணியாளர்களாக உருவாக்கும் இலக்குடன், HRD Corp-இன் வரி நிதியிலிருந்து 3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, 3 மில்லியன் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைச் சான்றிதழ்களை வழங்குவது பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என HRD Corp தலைமை நிர்வாக அதிகாரி Dato Shamir Aziz தெரிவித்தார்.
மேலும், 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் HRD Corp-க்கு 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 8,000 பேர் வரை பயன்பெறும் வகையில் ‘மடானி தொழில்முறைப் பராமரிப்பாளர் திறன்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக வேலை வாய்ப்புகளை அதிகரித்து, திறமையான பணியாளர் படையை உருவாக்குவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என HRD Corp தெரிவித்துள்ளது.



