
வாஷிங்டன், நவம்பர்-21,வரும் 2035-ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிகமான மக்கள் பின்பற்றும் மதமாக இஸ்லாம் உருவெடுக்கும் எனப் புதிய ஆய்வொன்று கணித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Pew Research Center-ரின் ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மதமாக கிறிஸ்தவம் விளங்குகிறது.
ஆனால், 2035-ஆம் ஆண்டுக்குள் உலக முஸ்லீம்களின் எண்ணிக்கை 2.57 பில்லியனாகவும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.52 பில்லியனாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் சமூகத்தில் நிலவும் அதிகமான பிறப்பு விகிதமே இந்த மாற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
2020 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், முஸ்லீம் பெண்களின் சராசரி குழந்தைப் பிறப்பு விகிதம் 3.1-ராகப் பதிவாகியுள்ளது.
தற்போதைய மக்கள் தொகைப் போக்கு தொடர்ந்தால், 2070-ஆம் ஆண்டுக்குள் உலக முஸ்லீம்களின் எண்ணிக்கை 3.6 பில்லியனைத் தாண்டும்; அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 37 விழுக்காடாகும்.
அதே சமயம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 3 பில்லியனுக்கும் குறைவாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு கணித்துள்ளது.
என்றாலும், இவை தற்போதைய மக்கள் தொகைப் போக்குகளின் அடிப்படையிலான கணிப்புகளே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.



