Latestஉலகம்

30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்திருக்கும் ‘Green Boots’; டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா முயற்சி

புதுடெல்லி, ஆகஸ்ட் 12 – எவரெஸ்ட் சிகரத்தை ஏறச் சென்ற இந்திய மலையேற்ற வீரர் ஒருவர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணுக்குத் திரும்பவிருக்கிறார். ஆனால் உயிருடன் அல்ல, இறந்த உடலாக.

1996-ஆம் ஆண்டு எவரெஸ்டில் ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையான ITBP-ஐ சேர்ந்த Dorje Morup. அவரது உடல் சுமார் 8,500 மீட்டர் உயரத்தில் உறைந்த நிலையில் கிடந்தது.

பச்சை நிற மலையேற்ற காலணிகளுடன் காணப்பட்டதால், அவரது உடல் பல ஆண்டுகளாக மலையேற்ற வீரர்களால் ‘Green Boots’ என்றே அழைக்கப்பட்டு, எவரெஸ்டின் வடகிழக்குப் பாதையில் ஓர் அடையாளமாகவும் மாறியது.

அவர் இருக்கும் பகுதி, ஆக்சிஜன் மிகக் குறைவான ‘Death Zone’ என்பதால், அங்கிருந்து உறைந்த உடலை கீழே கொண்டு வருவது மீட்புக் குழுவினரின் உயிருக்கும் பெரும் ஆபத்தாகும். கடுமையான வானிலை, செங்குத்தான மலைப்பாதை மற்றும் மீட்புக்கான வசதிகள் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் அவரது உடல் மூன்று தசாப்தங்களாக அங்கேயே இருந்தது.

அதுமட்டுமின்றி, ‘Green Boots’ யார் என்பதிலும் பல ஆண்டுகளாக குழப்பம் நீடித்தது. அது மற்றொரு இந்திய மலையேற்ற வீரரின் உடல் என பரவலாக நம்பப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில் அது Dorje Morup-உடையது என ITBP உறுதி செய்தது.

இதையடுத்து, தங்களது முன்னாள் வீரரின் உடலை சொந்த மண்ணுக்குக் கொண்டு வர ITBP தற்போது முயற்சியைத் தொடங்கியுள்ளது. எவரெஸ்டின் திபெத் பகுதியில் இருந்து உடலை மீட்பதற்காக சிறப்பு உயர்மலை மீட்புக் குழுவை நியமிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணவரை இழந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது 75 வயதாகும் அவரது மனைவி, அவரது உடலையாவது சொந்த மண்ணில் காணும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!